கதவை தாழிட்டு திறக்க முடியாமல் தவித்த சிறுமி
கதவை தாழிட்டு திறக்க முடியாமல் தவித்த சிறுமி
திருப்பூர்
திருப்பூரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுடைய மகள் கனிஷ்கா (வயது 2½). அருண்குமார் தனது மனைவி குழந்தையோடு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கே.பி.பி. தோட்டத்தில் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்தார். நேற்று காலை 9.30 மணிக்கு அப்பகுதியில் முதல் மாடியில் ஒரு வீட்டை வாடகைக்கு குடியேற பார்க்க வந்துள்ளனர்.
வீட்டுக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு அருண்குமார், கார்த்திகா ஆகியோர் வெளியே வந்துள்ளனர். சிறுமி மட்டும் வீட்டுக்குள் இருந்துள்ளாள். இவர்கள் வெளியே பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கனிஷ்கா வீட்டின் முன்புற கதவை உள்பக்கமாக தாழிட்டாள். சிறுமியால் தாள்பாளை திறக்க முடியவில்லை. இதனால் அழ தொடங்கினாள். இதை கவனித்த பெற்றோர் கதவை திறக்க முயன்றும் முடியவில்லை. தாயார் கதறினார். பின்னர் சிறுமி அழும் சத்தம் கேட்கவில்லை. இதனால் வீட்டுக்குள் இருக்கும் சிறுமியை நினைத்து பெற்றோர் பதறித்துடித்தனர்.
இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி (போக்குவரத்து) ஆண்டவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இரும்பு கதவை கட்டர் எந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் சிறுமி வீட்டின் படுக்கை அறையில் உள்ள பெட்டில் படுத்து உறங்கினாள். தாயார் ஓடிச்சென்று சிறுமியை தூக்கினார். அதன்பிறகு சிறுமி அழ தொடங்கினாள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
----