கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது


தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

தூத்துக்குடி

உடன்குடி, சாயர்புரம், ஆறுமுகநேரி பகுதியில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது.

தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. தவக்காலத்தின் முதல் நாளான நேற்று சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு பண்டாரஞ்செட்டிவிளை கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் புலால் உண்ணாமலும், தலையில் பூ வைக்காமலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து செலவினங்களுக்கான பணத்தை உண்டியலில் சேமிப்பார்கள். அதற்கான உண்டியலை கிறிஸ்தவ ஆலயங்களில் வழங்குவார்கள். ஆரம்ப காலங்களில் மண் கலய உண்டியலும், தொடர்ந்து பிளாஸ்டிக் உண்டியல்களும் வழங்கப்பட்டு வந்தது.

பனைஓலை உண்டியல்

பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் களையும் வகையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் செயல் இயக்குனரும், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை சேகர குருவுமான ஜான்சாமுவேல் பனைஓலை உண்டியல்களை கிறிஸ்தவர்களுக்கு வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பனை மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பனைபொருட்கள் உபயோகத்தை அதிகரிக்கும் விதமாகவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் பனைஓலை உண்டியல் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் கேடு, பருவ நிலை மாற்றங்களால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. பனைஓலை உண்டியல்களில் சேமிக்கும் பணம் இயேசு கிறிஸ்து மரித்த புனித வெள்ளி ஆராதனை நிகழ்ச்சிகளில் மக்கள் படைப்பார்கள். உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு திருமண்டிலம் மூலம் ஏழை, ஏளியவர்களின் நலனுக்கு செலவிடப்படும், என்றார். பனைஓலை உண்டியல்களை உடன்குடி சுற்று வட்டார சபைகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

சாயர்புரம்

சாயர்புரம் சுற்று வட்டார பகுதியில் கிறிஸ்தவர்கள் தவக்காலமான சாம்பல் புதன் தொடக்க விழா கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. சாயர்புரம் தூய திருத்துவ ஆலயத்தில் தவக்கால சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சேகர குரு இஸ்ரவேல்ராஜாதுரைசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். காலை 7 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாயபுரம் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் நடந்த திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார் சாம்பல் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு வாழ்த்தினார். இதேபோன்று இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

கழுகுமலை

கழுகுமலை புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆலய பங்குதந்தை அண்டோ திருப்பலி நிறைவேற்றினார்.

தொடர்ந்து திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதை முன்னிட்டு அங்குள்ள புனித சந்தியாகப்பர் திருத்தல குரூஸ் ஆலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன்கிழமை நிகழ்ச்சியில் காலை 6.15 மணிக்கு பங்குதந்தை கிஷோக் திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் குருத்தோலையில் எரித்து எடுக்கப்பட்ட சாம்பலை அவர் கிறிஸ்தவ மக்களுக்கு நெற்றியில் பூசினார். தவக்காலங்களில் ஆலயத்தில் தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து ஆசிர்வாதம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதிரிகள், பங்குபேரவை மற்றும் ஊர்நலக்கமிட்டியினர் செய்துள்ளனர்.


Next Story