கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது


கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
x

சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித நாட்களை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் தொடக்கமாக நேற்று சாம்பல் புதன் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டை சவேரியாா் பேராலயத்தில் நேற்று நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கி மறையுரை ஆற்றினாா். தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று எரிக்கப்பட்ட குருத்தோலை சாம்பலால் நெற்றியில் சிலுவை வரைந்து சாம்பல் புதன் தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல் பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டில் உள்ள அந்தோணியாா் ஆலயம், டக்கரம்மாள்புரம் தூயமீட்பரின் ஆலயம், சாந்திநகர் குழந்தைஏசு ஆலயம், உடையாா்பட்டி திரு இருதய ஆலயம், நெல்லை அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகா் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோணியாா் தேவாலயம் ஆகியவற்றில் சாம்பல் புதன் சிறப்புத்திருப்பலிகள் நடைபெற்றன.

நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. திருச்சபை பாளையங்கோட்டை ஊசி கோபுரம் தூயதிரித்துவ பேராலயத்தில் தவக்கால தொடக்க ஆராதனை நேற்று காலையில் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் சேவியர் காலனி தூய பேதுரு ஆலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

வருகிற ஏப்ரல் 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந் தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சியும், 7-ந் தேதி பெரியவெள்ளி சிறப்பு பிராா்த்தனையும் நடைபெறும். 9-ந் தேதி ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

1 More update

Next Story