சாலை அமைத்த நபரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்

தடுப்பணையில் மண்ணை கொட்டி சாலை அமைத்த நபரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
ஆம்பூர் சான்றோர்குப்பம் - சோலூர் இடையே அமைந்துள்ள 2 தடுப்பணைகளில் மண்ணை கொட்டி, மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, நீர்வழிப்பாதையை மூடி, அப்பகுதி வழியாக கல்குவாரிக்கு வாகனங்கள் செல்வதற்காக மண் சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் மண்சாலை அமைத்த தனிநபரை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாசில்தார் குமாரி நீர்வழிப்பாதையையும், 2 தடுப்பணைகளையும் மண் போட்டு மூடி சாலை அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தடுப்பணைகளில் கொட்டப்பட்ட மண்ணையும், நீர்வழிப்பாதையை மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் அகற்ற உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.