மூடப்பட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்


மூடப்பட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்
x

கோத்தகிரியில் மூடப்பட்டு உள்ள 2 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் மூடப்பட்டு உள்ள 2 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காணவும், குன்னூரில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்கும் வகையில் நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ் கோத்தகிரியில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஐ.போஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கருணாகரன், மூர்த்தி, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 15 கிராமங்களை சேர்ந்த ஊர்த் தலைவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது. கூட்டத்தில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி பகுதிகளில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை விவசாயிகள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தொழிற்சாலைகளை மீண்டும் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.15 கோடி கடன் வழங்க வேண்டும். கடனை விவசாயிகள் மாதம் ரூ.2 லட்சம் வீதம் திருப்பி செலுத்த தயாராக உள்ளோம்.

உண்ணாவிரத போராட்டம்

செயல்படாத தொழிற்சாலைகளை விவசாயிகள் ஏற்று நடத்துவதன் மூலம், பச்சை தேயிலைக்கு நல்ல கொள்முதல் விலையை விவசாயிகளே நிர்ணயித்து, அதை விவசாயிகளுக்கு வழங்க முடியும். தேயிலை கிலோவுக்கு ரூ.30 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 25 முக்கிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து ஆலோசனை பெறப்பட்டு வருகிறது.

இதுவரை 5 பகுதிகளில் கூட்டம் நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள 20 பகுதிகளை சேர்ந்த ஊர் தலைவர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனை பெறப்படும். தொடர்ந்து அடுத்த மாதம் குன்னூரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கீழ் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story