கூட்டுறவு அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும்
கூட்டுறவு அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும்
முத்துப்பேட்டையில் ரூ.13.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூட்டுறவு அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த கட்டிடம் அகற்றம்
முத்துப்பேட்டை பெரியகடைத்தெருவில் கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வந்தது. நாளடைவில் இந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் மழைகாலத்தில் மழைநீர் கசிந்ததால் பொருட்கள் சேதமாகியது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். எனவே பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று பழுதடைந்த அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
ரூ.13.35 லட்சம் நிதி ஒதுக்கீடு
பின்னர் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட மாரிமுத்து எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.13.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி நடந்தது. தற்போது இ்ந்த பணிகள் முடிவடைந்துள்ளது. ஆனால் கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் பராமரிப்பின்றி காணப்படுவதால் கட்டிடம் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக திறக்கப்படாமல் உள்ள கூட்டுறவு அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.