கோவை-அவினாசி சாலை மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும்
கோவை-அவினாசி ரோடு மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும் என்று சட்டசபை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் கூறினார்.
கோவை-அவினாசி ரோடு மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும் என்று சட்டசபை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் கூறினார்.
சட்டசபை மனுக்கள் குழு
தமிழக சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் தலைவரும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோவி.செழியன் மற்றும் உறுப்பினர்கள் கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில்குமார், பிரபாகரராஜா ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் கோவை-அவினாசி சாலையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணிகளை பார்வையிட்டனர். பின்னர் டைடல் பார்க் அருகில் பி.டி.சாலை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.
அதனைதொடர்ந்து வெள்ளலூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், 63-வது வார்டு ராமலிங்க ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மனுக்கள் மீது ஆய்வு
இந்த நிலையில் சட்டசபை மனுக்கள் குழு கோவை வருதையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு தமிழக சட்டமன்ற பேரவை, சென்னை என்ற முகவரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி வழங்கப்பட்ட தனிநபர் குறை, நீதிமன்ற வழக்கு, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா உள்பட சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு ஆய்வுக்கு எடுத்து கொண்டது. அதன்படி, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவானது நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேட்டி
இதையடுத்து தமிழக சட்டசபை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை மனுக்கள் குழு சார்பில் கோவை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை (இன்று) நீலகிரி மாவட்டத்தில் மனுக்கள் மீதான விசாரணையை கள ஆய்வு செய்யப்படும். மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நேரடி கள ஆய்வு செய்து விரைவாக நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருப்போம்.
2024-ம் ஆண்டு நிறைவடையும்
கோவை-அவினாசி ரோடு மேம்பால பணிகள் விரைவாக நடந்து கொண்டு வருகிறது. இந்த பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும். பால பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொறுப்பு அமைச்சர் ஆகியோர் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். மனுதாரர்கள் கோரிக்கை வைத்த இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 122 மனுக்கள் கள ஆய்வுக்கு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.