கிரிவலம் வரும் பக்தர்கள் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


கிரிவலம் வரும் பக்தர்கள் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x

கிரிவலம் வரும் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தினை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

கிரிவலம் வரும் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தினை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

மக்கள் இயக்கம்

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகளை அவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து அவரது தலைமையில் தூய்மைக்கான உறுதிமொழியினை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் மக்கும், மக்காத குப்பை வகைகள் குறித்த விளக்க கண்காட்சியை பள்ளி மாணவிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

நாம் சுத்தமாக இருந்தால் தான் நமது வாழ்க்கை முறை சுகாதாரமான நிலையில் இருக்கும். தூய்மை என்பது நமது வாழ்வில் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு. மனதளவில் நாம் தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணியினை இல்லத்திலிருந்து தொடங்க வேண்டும்.

நாம் எவ்வாறு நம் நமது இல்லத்தை தூய்மையாக வைத்திருக்கிறோமோ அவ்வாறே நாம் வெளியில் செல்லும் போது வெளிப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழக அரசு அறிவத்துள்ளபடி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து தங்களது அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மை படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தீபத்திருவிழா அன்றும், சித்ரா பவுர்ணமி அன்றும், பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர். கிரிவலம் வரும் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தினை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அனைத்து பொது மக்கள், வணிகர்கள், ஓட்டல்கள் நடத்துபவர்கள் மற்றும் கடை வைத்திருப்போர்களுக்கு தூய்மையின் அவசியம் குறித்து திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவர் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி, திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story