ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2023-ம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் நேற்று வெளியிட்டார். திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி பெற்று கொண்டார்.இந்த பட்டியலில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 505 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 46 ஆயிரத்து 687 பெண் வாக்கார்களும், 101 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 20 லட்சத்து 53 ஆயிரத்து 293 வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னதாக கலெக்டர் முருகேஷ் கூறுகையில், ''
வாக்காளர் பட்டியலில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் ஓரே மாதிரியான புகைப்படம் கொண்ட பதிவுகள் தொடர்பாக கள விசாரணை மேற்கொள்ளப்பட்டன. வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் இணைக்கும் பணியை செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் வரப்பெற்ற படிவங்களில் மூலமாக புதியதாக 10,023 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
58,260 வாக்காளர்கள் நீக்கம்
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தோர் 7,435 பேர், இடம் பெயர்ந்தோர் 13,511 பேர், இருமுறைப் பதிவு 37,314 பேர் என 58,260 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்து படிவங்கள் டிசம்பர் 8-ந் தேதி வரையிலும் வழங்கப்படுகிறது. சிறப்பு முகாம் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந் தேதிகளில் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2023 அன்றும் வெளியிடப்படும்.
சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
மற்ற வேலை நாட்களில் மனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அல்லது தேர்தல் ஆணைய இணையதளம் https://www.nvsp.in/ மற்றும் Voter Helpline என்ற மொபைல் ஆப் மூலமாகவும் வாக்காளர்கள், தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக தேர்தலுக்கான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல் (பொது), குமரன் (தேர்தல்), திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சையித் சுலைமான் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.