மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்
மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கலெக்டர் பாடம் கவனித்தார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு மூலமாக ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து கலெக்டர் அந்த வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் சேர்ந்து நாற்காலியி்ல் அமர்ந்து, ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கவனித்தார்.
கற்பிக்கும் முறை, கற்றல் முறை குறித்தும் மாணவர்களிடம் கலெக்டர் ஆஷா அஜித் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நூலகத்தில் மாணவர்களின் பயன்பாடு, நூலகத்தில் புத்தக இருப்பு, கூடுதலாக வைக்க வேண்டிய புத்தகங்கள் குறித்தும், பள்ளி சமையலறையில் உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறை வசதி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உடன் சென்றிருந்தார்.