தோட்டக்கலை துறை மூலம் நடைபெறும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை அருகே நவ்லாக் பண்ணையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.
கலெக்டர் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி, நேற்று, ராணிப்பேட்டை அருகே உள்ள நவ்லாக் பண்ணையை நேரில் பார்வையிட்டார். அப்போது நவ்லாக் தென்னை ஒட்டு வீரிய பண்ணையில் தோட்டக்கலைத்துறையின் மூலம், குட்டை- நெட்டை, நெட்டை-குட்டை தென்னங்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இப்பண்ணையில் வளர்க்கப்படும் தென்னங்கன்றுகள், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தலா 2 கன்றுகள் வீதம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரிய ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது என தோட்டக்கலை அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.
கூலியை உயர்த்த வேண்டும்
இந்தநிகழ்ச்சியின்போது பண்ணையில் வேலை செய்யும் பணியாட்கள் தினக்கூலியை ரூ.384 ஆக உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மற்ற மாவட்டங்களில் எவ்வளவு வழங்கப்படுகிறதோ அதன்படி கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் வளர்மதி அவர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, நவ்லாக் தோட்டக்கலை பண்ணையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக மா, கொய்யா, சப்போட்டா, நாவல் ஒட்டுச் செடிகள் வளர்க்கப்பட்டு வருவதையும், குழிதட்டு முறையில் தக்காளி, மிளகாய், கத்தரி, நாற்றுகள் பப்பாளி செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு மா மற்றும் கொய்யா செடிகள் ஒட்டு கட்டும் முறைகளையும், பதியன் போடும் முறைகளையும் கேட்டறிந்தார். மேலும், அங்கு மரக் கன்றுகளை நட்டார்.
வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, தோட்டக்கலை துணை இயக்குனர் லதா மகேஷ், திட்டம் துணை இயக்குனர் செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வநாதன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பசுபதிராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், தோட்டக்கலை அலுவலர் நீதி மொழி, பன்ணை மேலாளர் பிரேமா குமாரி, தோட்டக்லை உதவி அலுவலர்கள்
மோனேஷ். அருண் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.