ஆய்வுக்கு சென்ற கலெக்டர் ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார்
ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு கணித பாடம் நடத்தினார். ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு கணித பாடம் நடத்தினார். தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ள ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்யவும், ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
திடீர் ஆய்வு
ஜவ்வாதுமலையில் அரசுவெளியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை கலெக்டர் முருகேஷ் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்தார். மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் கற்பித்ததுடன் கேள்விகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை ஆய்வு செய்ததோடு அரசால் அளிக்கப்படும் பாடப்புத்தகங்கள், சீருடைகள், பைகள், காலணிகள் ஆகியன அனைவருக்கும் அளிக்கப்பட்டதா என்பதை மாணவ, மாணவிகளிடம் கேட்டு உறுதி செய்தார்.
அதன்பின் மாணவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாணவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
வரும் நாட்களிலும் அவ்வப்போது காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மருத்துவ துறையினருக்கு அறிவுறுத்திய அவர் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
கூடுதல் கட்டிடம்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனே தொடங்க பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முறையாக கல்வி கற்றுத்தருவதுடன் சுகாதாரம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தமாக பராமரிக்கவும் அவர் அறிவுரை வழங்கினார்.
ஒழுங்கு நடவடிக்கை
மேலும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தராத ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், பள்ளி தொடர்பான ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரவும் உத்தரவிட்டார்.
அதன்பின் அரசவெளி உள்ளிட்ட 10 அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தங்களையும் வழங்கினார்.
ஆய்வின்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, மாவட்ட பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.