போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை


போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x

சிறுமி தற்கொலை வழக்கில் போலீசாரை கண்டித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

முற்றுகை

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் கைது செய்ய வலியுறுத்தியும், இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத கை.களத்தூர் போலீசாரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன், துணைத் தலைவர் லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அதன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்ட போலீசாரையும், கை.களத்தூர் போலீசாரையும் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சிறுமி தற்கொலை வழக்கில் காரணமானவர்களை போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தள்ளு-முள்ளு

சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். இந்த வழக்கை உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு கூறினர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். மனுவினை பெற்று கொண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story