இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் சாலை மறியல்
செங்கத்தில் முறையாக வாகன வசதி ஏற்படுத்தாத போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கத்தில் முறையாக வாகன வசதி ஏற்படுத்தாத போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டம்
செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
வட்ட தலைவர் சர்தார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு முத்தையன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அம்பேத்கர் சிலை முன்பு தொடங்கிய ஊர்வலம் பாரத ஸ்டேட் வங்கி வரை சென்று வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கைது
இதை தொடர்ந்து மறியலை கைவிட காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மறியலை கைவிட மறுத்த கம்யூனிஸ்டு கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் பள்ளி பஸ்சில் தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்ய தேவையான வாகனங்களை காவல்துறையினர் ஏற்பாடு செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே பஸ்சில் அனைவரையும் அழைத்து சென்றதாகவும், மீதமிருந்தவர்களை 2 ஆட்டோக்களில் சென்றனர். மேலும் வட்ட தலைவர் சர்தார், மாவட்ட நிர்வாக குழு முத்தையன், மாதேஸ்வரன், தங்கமணி உள்ளிட்டோரை கைது செய்ய வாகனங்கள் இல்லாததால் சாலையில் காத்திருந்தனர்.
மீண்டும் சாலை மறியல்
இந்த நிலையில் செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பயன்படுத்தும் போலீஸ் வாகனத்தில் ஏற முயன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
அப்போது காவல்துறையினருடன் கம்யூனிஸ்டு கட்சியினரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்ல முறையான வாகனங்களை ஏற்பாடு செய்யாததை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும், சாலையிலேயே நீண்ட நேரமாக நிற்க வைத்து அலைகழித்ததாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படடது.