இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

அரசு ஆஸ்பத்திரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், உயிர் காக்கும் மருந்துகள் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பலமுறை கோரிக்கை அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யா தேவி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர் ராஜவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க செயலாளர் வீரராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போதுமான டாக்டர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். டாக்டர்கள் இரவு நேரங்களில் தங்கி பணி செய்ய வேண்டும், உயிர் காக்கும் மருந்துகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

தொடர்ந்து கீழ வீதியில் இருந்து பாடைகட்டி ஊர்வலமாக அரசு ஆஸ்பத்திரி நோக்கி வந்த இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பாடையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story