கள்ளக்குறிச்சி, வாணாபுரம், தியாகதுருகத்தில்மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் :128 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், வாணாபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 128 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற்றிடக் கோரியும், படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்குதல், மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலையை உருவாக்குதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை ஆட்சியை விட்டு வெளியேறக் கோரியும் கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நான்குமுனை சந்திப்புக்கு வந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.
முன்னதாக போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாவு, கஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் மஞ்சப்பன், ஒன்றிய பொருளாளர் ரீத்தா மற்றும் நிர்வாகிகள் கருணாநிதி, மலர்கொடி, ஜெயக்கொடி, அண்ணாமலை, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணாபுரம்
இதேபோன்று, வாணாபுரம் பகண்டை கூட்டு ரோடு மும்முனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களில் 51 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தியாகதுருகத்தில்
தியாகதுருகத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரே நடந்த போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட குழு நிர்வாகி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களை தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 12 பெண்கள் உள்ளிட்ட 27 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில்தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.