கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
திருப்பத்தூர், வாணியம்பாடியில் கம்யூனிஸ்டு கட்சியி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட குழு உறுப்பினர் ஏகலைவன் தலைமையில் ஸ்டேட் வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விலைவாசி உயர்வை குறைக்கக் கோரியும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். சாலை மறியலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக், காசி, கேசவன் ஜோதி உள்ளிட்ட 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடியில் கம்யூனிஸ்டு கட்சியினர், மாவட்ட நிர்வாகி இந்துமதி தலைமையில் விலைவாசி உயர்வை குறைக்கக் கோரியும், வேலை வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ெரயில் மறியில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.