காய்கறிகளை சாலையில் கொட்டி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
வேலூரில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜி.லதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் துரைசெல்வம், எல்.மணி, ஆனந்தன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றுக்கு மத்திய பா.ஜ.க. அரசு காரணம் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கைது
அவர்கள் அண்ணாசாலையில் அமர்ந்து விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் விலைவாசி அதிகரித்துள்ளதை எடுத்துக்கூறும் வகையில் நூதனமுறையில் காய்கறிகளை சாலையில் கொட்டினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 80 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
2 பிரிவுகளில் வழக்கு
திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது பொதுஇடத்தில் சட்ட விரோதமாக கூடியது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.