மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x

பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

சாலை விபத்துகள்

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்தை குறைப்பதற்கு மேம்பாலம், சுரங்கப்பாதை மற்றும் வேகத்தடை, எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடக்கும் இடமாக கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

ரூ.15 கோடியில் மேம்பாலம்

இதேபோன்று வேலூரை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. மேலும் அந்த பகுதியில் சாலையை கடக்கும் பொதுமக்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வந்தது. பெருமுகை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வந்தனர்.

இதனால் பெருமுகையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைந்து முடிக்க கோரிக்கை...

இதையொட்டி அப்பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்கள் நிறைவடைந்தும் பாதியளவு பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. சென்னை-பெங்களூரு மற்றும் பெங்களூரு-சென்னை சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளன.

தார் ஊற்றி சாலை அமைக்கப்படவில்லை. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக தடுமாறியடி சென்று வருகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் பெண்கள் பலர் சாலையில் விழுந்து காயம் அடைகின்றனர். கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது சாலையில் இருந்து கிளம்பும் தூசியால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே முதற்கட்டமாக இருபுறமும் உள்ள சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும். மேலும் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

60 சதவீதம் நிறைவு

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெருமுகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தையொட்டி இருபுறமும் உள்ள சாலை மழை காரணமாக தார்சாலையாக மாற்றப்படவில்லை. விரைவில் அங்கு தார் சாலை அமைக்கப்படும் என்றனர்.


Next Story