மீன்பிடி துறைமுகத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


மீன்பிடி துறைமுகத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:46 PM GMT)

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழையாறு மீன்பிடி துறைமுகம்

இந்த துறைமுக வளாகத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பழையாறு மீன்பிடி துறைமுகம் இயற்கை துறைமுகம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த துறைமுகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேம்படுத்தப்பட்டது. பழையாறு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துறைமுகம் மேம்படுத்தும் பணி தொடங்கியது. இதில் மீன் விற்பனை கூடம், வலை பின்னும் கூடம், படகு அணையும் தளம், கழிவறை வசதி, மீன்கள் இருப்பு வைக்கும் இடம், ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, மீன் உலர் தளம் உள்ளிட்டவைகள் புதியதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்புச்சுவர் கட்டும் பணி

துறைமுகத்தில் 500 மீட்டர் தூரத்துக்கு மண் அரிப்பை தடுக்கும் விதத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தடுப்புச்சுவர் கட்டுவதற்காக துறைமுகத்தை ஒட்டி கரை பகுதியில் மண் மூட்டைகளை வரிசையாக அடுக்கி அடைப்பு ஏற்படுத்தினர்.

ஆனால் தடுப்புச் சுவர் கட்டும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த பணி மீண்டும் தொடங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழையாறு துறைமுகத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியை விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து பழையாறு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், பழையாறு துறைமுகம் மேம்படுத்தும் பணி தொடங்கி ஆரம்ப கட்ட நிலையில் இருந்து வருகிறது. துறைமுகத்தை ஒட்டி உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி ஆழபடுத்தி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துறைமுகத்தில் தடுப்புச் சுவரை மட்டும் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

துறைமுகத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள அனைத்து பணிகளும் தொடக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. பழையாறு துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளில் ஒரு பகுதியான பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி ஆழபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளையும் துரிதமாக மீண்டும் தொடங்கி செயல்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story