கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்


கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Sept 2023 2:00 AM IST (Updated: 21 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கழிவுநீர் கால்வாய் சேதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் 26-வது வார்டுக்கு உட்பட்ட மிஷன் ஹில் குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிற்னர். இந்த பகுதியில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கால்வாய் உடைந்து கிடந்தது. இதனால் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பழைய கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றப்பட்டது. மேலும் நடைபாதையில் குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது.

நடவடிக்கை இல்லை

ஆனால் 2 மாதங்களை கடந்தும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கவில்லை. இதன் காரணமாக நடைபாதையில் உள்ள குழிகளால், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கழிவுநீர் கால்வாயை அகற்றும்போது, நடைபாதையையும் தோண்டி போட்டுவிட்டனர். தற்போது அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. முதியவர்கள், சிறுவர்கள் தவறி விழுந்து வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.


Next Story