சுரங்க பாலம் பணிக்கு கட்டிடங்கள் இடிப்பு
திருப்பூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சுரங்க பாலம் அமைக்கும் பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்
திருப்பூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சுரங்க பாலம் அமைக்கும் பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
சுரங்க பாலம்
திருப்பூர் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆங்காங்கே பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பார்க் ரோட்டில் இருந்து குமரன் ரோடை கடந்து யுனிவர்சல் தியேட்டர் ரோட்டை இணைக்கும் வகையில் சுரங்க பாலம் அமைக்கும் பணி கடந்த 12 வருடங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது. ரூ.9½ கோடி மதிப்பில் பணி தொடங்கப்பட்டு பார்க் ரோட்டில் இருந்து எம்.ஜி.ஆர்.சிலை வரைக்கும் பாலம் கட்டும் பணி நடந்தது.
இந்த நிலையில் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பல வருடங்களாக இந்த பணி தொடங்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ெநடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
கட்டிடங்கள் இடிப்பு
இதற்காக குமரன் ரோட்டில் இருந்து யுனிவர்சல் தியேட்டர் ரோட்டிற்கு செல்லும் வழியில் உள்ள இடங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது. ஆனால் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் காலி செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கால அவகாசம் கேட்டனர்.
இதனால் இந்த பணி தள்ளிபோடப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிலத்தின் உரிமையாளர்கள் தாங்களாக பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இதனால் இங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பாலம் கட்டும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.