மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு புறவழிச்சாலை
கோவை மாநகர பகுதியில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. கேரளா உள்பட வெளிமாநிலங்க ளில் இருந்து வரும் வாகனங்கள் கோவை மாநகர பகுதிக்குள் வருவதால் மற்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கோவை-பாலக்காடு, கோவை-மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ரூ.1,630 கோடி
எந்தெந்த கிராமங்கள் வழியாக இந்த சாலையை அமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி கோவை- பாலக்காடு ரோடு மைல்கல் என்ற பகுதியில் தொடங்கி சிறுவாணி ரோடு மாதம்பட்டி, வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே முடிவடைகிறது.
இந்த சாலை 32.4 கி.மீ. தூரத்தில் 4 வழிச்சாலையாக ரூ.1,630 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு மொத்தம் 370 ஏக்கர் நிலம் தேவை. 638 பேரிடம் இருந்து 310 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். மீதமுள்ள நிலம் அரசு நிலம் என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணி
இந்த பணிக்கு முதற்கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி மாவட்ட வருவாய்த்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது 85 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து இருக்கிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த உள்ளோம்.
முதற்கட்டமாக கோவை பாலக்காடு ரோடு மைல்கல்லில் இருந்து சிறுவாணி ரோடு மாதம் பட்டி வரை 11.2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அடுத்த மாதம் தொடங்கும்
இதற்காக மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளை யம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் மொத்தம் 140 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.
இந்த நிலம் கையகப்ப டுத்தும் பணி 90 சதவீதத்துக்கும் மேல் முடிந்து விட்டது. இதில் 20 ஏக்கர் அரசு நிலம் ஆகும்.
முதற்கட்ட பகுதியில் பணி செய்ய நிதி ஒதுக்கப்பட்டு டெண்ட ரும் விடப்பட்டு உள்ளது. எனவே அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த பணி தொடங்கி 2 ஆண்டுக்குள் முடிந்து விடும்.
இந்த பணி கள் நடந்து கொண்டு இருக்கும்போதே மற்ற 2 பகுதிகளிலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கும்.
நெரிசல் இருக்காது
இந்த சாலை 45 மீட்டர் அகலத்துக்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதில் முக்கிய பகுதிகளுக்கு செல்ல சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்போது கேரளாவில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வர வாய்ப்பு இல்லை.
அத்துடன் கிழக்கு புறவழிச்சாலை பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சேலம்-கொச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகியவற்றை இணைத்து அமைக்கப்படுகிறது.
இதனால் வெளியூரில் இருந்து ஊட்டி, கேரளா செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வர வேண்டியது இருக்காது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.