புதிய பள்ளி கட்டிட பணிகளை 5-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்


புதிய பள்ளி கட்டிட பணிகளை 5-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்படும் பள்ளி கட்டிட பணிகளை வருகிற 5-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு வாரத்தில்

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நிலுவையில் உள்ள 80 சதவீத பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும் எனவும், ஏற்கனவே 2022-23-ம் நிதியாண்டில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெமிலி, வாலாஜா, திமிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் எந்தவொரு பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் இப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட வேண்டும் என கூறினார்.

நிலுவை பணிகள்

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 2,321 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றியப் பொறியாளர்கள் பயனாளிகளை நேரடியாக சந்தித்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்திட வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 84 புதிய பள்ளிக் கட்டிடங்களை வருகின்ற 5-ந் தேதிக்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும். மேலும், வாக்குச் சாவடிகள் திருத்தி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து. பள்ளிகளில் ஏதேனும் சீரமைப்பு பணிகளோ அல்லது வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்குமாயின் அது குறித்து இந்தவார இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் சமையற் கூட பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று முதல்-அமைச்சரால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஆகவே, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையற் கூடங்களில் நேரில் ஆய்வு செய்து தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், உணவு சமைக்கத் தேவையான பாத்திரங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து ஆராய்ந்து உடனடியாக அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்த், செயற்பொறியாளர் முத்துசாமி மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story