குமரியில் ஒரே நாளில் 28,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி


குமரியில் ஒரே நாளில் 28,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

குமரி மாவட்டத்தில் 581 இடங்களில் நடந்த மெகா முகாமில் மொத்தம் 28 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 581 இடங்களில் நடந்த மெகா முகாமில் மொத்தம் 28 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இன்னும் சுமார் 2½ லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 32-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் 581 இடங்களில் தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. இதற்காக 571 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர்.

ஆணையர் ஆய்வு

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், கோட்டார் ரெயில் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடந்தது. வடிவீஸ்வரம் மற்றும் வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டன. அதில் பெரும்பாலானோர் 2-வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தியதை பார்க்க முடிந்தது.

28 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் முதல் கட்ட தடுப்பூசி 3,953 பேருக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி 14,218 பேருக்கும், 3-வது கட்ட பூஸ்டர் தடுப்பூசி, 60 வயதுக்கு மேற்பட்ட 9,979 பேருக்கும் என மொத்தம் 28 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story