வார்டு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட கவுன்சிலர்


வார்டு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட கவுன்சிலர்
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM (Updated: 19 May 2023 6:45 PM)
t-max-icont-min-icon

புவனகிரி வார்டு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட கவுன்சிலர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தானே களத்தில் இறங்கினார்

கடலூர்

புவனகிரி

புவனகிரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லை. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி செயல் அலுவலர்தான் புவனகிரி பேரூராட்சிக்கும் பொறுப்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். இதனால் 18 வார்டுகளில் உள்ள பிரச்சினைகள், பொதுமக்களின் கோரிக்கைகளை கவனிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் புவனகிரி பேரூராட்சி 14-வது வார்டில் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்பட்டது. இதுபற்றி அந்த வார்டு கவுன்சிலர் பாலமுருகன் செயல் அலுவலருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்களுக்களின் கேள்விகளுக்கு கவுன்சிலரால் பதில் சொல்ல இயலவில்லை. இதனால் தனது வார்டை தானே சுத்தம் செய்ய முடிவு செய்த கவுன்சிலர் பாலமுருகன் நேற்று முன்தினம் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல் ஆகியபணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் நீங்கள் ஏன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறீர்கள்? பேரூராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவியுங்கள் என்றனர். இதற்கு, இந்த பிரச்சினை குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.

மக்களாகிய நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என்னுடைய வார்டை உங்களுக்காக நானே சுத்தம் செய்து செய்கிறேன் என்றார்.

தனது வார்டை தானே சுத்தம் செய்யும் பணியில் கவுன்சிலர் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story