கவுன்சிலர்களின் போராட்டம் வாபஸ்
குளச்சல் நகராட்சியில் கவுன்சிலர்களின் போராட்டம் வாபஸ்
குளச்சல்,
குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி பாக்கி வைத்திருப்பவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்த நகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், ரகீம், சஜிலா, சந்திர வயோலா, பனிக்குருசு, மேரி, ஷீலா ஜெயந்தி, ரமேஷ், ஜாண் பிரிட்டோ, சுஜித்திரா, தனலட்சுமி, வினேஷ், லாரன்ஸ், திலகா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்களுடன் ஆணையர் விஜயகுமார் பேச்சு வார்த்தை நடத்த முயன்றார். ஆனால் கவுன்சிலர்கள் அதை ஏற்கவில்லை. இதனால், நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து தி.மு.க. தலைமை ஏற்பாட்டின்படி மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காலையில் ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து நேற்று மதியம் ஆணையர் விஜயகுமார் மற்றும் மேற்கூறிய கவுன்சிலர்களுடன் தி.மு.க.மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.