தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது

ராமநாதபுரம் அருகே கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தம்பதியை கட்டிப்போட்டு
ராமநாதபுரம் அருகே உள்ளது வழுதூர் தி.மு.க. பிரமுகர் பி.டி.ராஜா. இவரையும் இவரது மனைவி ராதிகா என்பவரையும் கடந்த 2014-ம் ஆண்டு மர்ம கும்பல் கட்டிப்போட்டு துப்பாக்கியால் மிரட்டி 47 பவுன் நகை, ரொக்கம் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சரவணன் என்பவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி நகைகளை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அருண்குமார் என்பவர் மதுரை வரிச்சியூர் ரோடு பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கண்ட சரவணன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இந்த சம்பவங்களில் போலீசார் கைப்பற்றிய நகை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு மேற்கண்ட 2 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் டி.ஜி.பி. உத்தரவினை தொடர்ந்து ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் போலீசார் விசாரணையை ஆரம்பத்தில் இருந்து தொடங்க உள்ளனர். இந்த விசாரணையில் பல வெளிவராத முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் தப்பிய குற்றவாளிகள் கைதாவார்கள் என்றும் கூறப்படுகிறது.






