14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி கோர்ட்டில் ஆஜர்
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி கோர்ட்டில் ஆஜராகினர்.
திருச்சி, ஜூன்.9-
மோசடி வழக்கு
திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் ரூ.45 லட்சம் வரையில் கடன் பெற்றார். கடன் தொகையை கட்டாமல் சில மாதங்களிலேயே அவர் மாயமானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜெகநாதன், அவரது மனைவி மைதிலி மற்றும் நண்பர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் வழக்கை தோண்டி துருவத்தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சென்னையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க சென்னைக்கு சென்று முகாமிட்டனர்.
தம்பதி ஆஜர்
இது குறித்து தகவல் அறிந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மாஜிஸ்திரேட் சுபாஷினி முன்னிலையில் ஆஜராகினர். கடந்த 14 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த தம்பதியினர் கோர்ட்டில் ஆஜரான சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.