குற்றாலம் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் ராமச்சந்திரன்


குற்றாலம் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் ராமச்சந்திரன்
x

குற்றாலம் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுலா வளர்ச்சி கழகம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 1971-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை தொடங்கினார். நாட்டின் அன்னிய செலவாணி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் சுற்றுலா துறையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகமானது ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் தங்கும் விடுதிகள், அமுதம் என்ற பெயரில் உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பஸ் சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நடத்தி வருகிறது. இதில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலா தலங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் உள்ளன. மேலும் 588 படகுகளும் உள்ளன.

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள்

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பத்தமடை பாயை அனைத்து மக்களும் விரும்பி வாங்குகின்றனர். இதனை சுற்றுலா பயணிகள் எளிதில் வாங்கும் வகையில் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், திருக்குறுங்குடி கோவில், உவரி கப்பல் மாதா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மணிமுத்தாறு

தொடர்ந்து மணிமுத்தாறு அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். மேலும் மணிமுத்தாறு அணையில் படகு போக்குவரத்து தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, அணை அடிவாரத்தில் மேற்கு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் சாகச சூழல் சுற்றுலா பூங்காவும், ஒரு ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்க இடத்தை தேர்வு செய்து, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

அவரிடம், மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவிக்கு அரசு பஸ்சில் செல்லும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் மணிமுத்தாறு வன சோதனைச்சாவடியில் தடுத்து இறக்கி விடுவது, ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்காமல் இருப்பது ஆகியவை குறித்து கேட்டபோது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.


Next Story