போலி பணி நியமன ஆணை மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
குமரி மாவட்டத்தில் போலி பணி நியமன ஆணை வழங்கி 7 பேரிடம் ரூ. 36.50 லட்சம் மோசடி செய்தது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போலி பணி நியமன ஆணை வழங்கி 7 பேரிடம் ரூ. 36.50 லட்சம் மோசடி செய்தது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
போலி பணி நியமனம்
கருங்கல் மங்கலகுன்று ஊராளிபற்றுவிளையை சேர்ந்தவர் ரதி (வயது 37). இவர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
என் கணவர் சுதாகர் கோவையில் வேலை பார்த்தபோது அவருக்கு கோவையை சேர்ந்த 2 பேரிடம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பத்திர பதிவுத்துறையில் 50 எழுத்தர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், ரூ.10 லட்சம் தந்தால் அதை எங்களுக்கு பெற்று தருவதாகவும் கூறினர். இதை நம்பி நான், என் கணவர் உள்பட 7 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.36 லட்சத்து 50 ஆயிரத்தை 2 பேரின் வங்கி கணக்குக்கு பல தவணைகளாக செலுத்தினோம். இதை பெற்றுக் கொண்ட இருவரும் ஒவ்ெவாரு தாசில்தார் அலுவலகங்களின் முத்திரைப்பதிவுடன் பணி உத்தரவு ஆணை வழங்கினார்கள். அந்த பணி ஆணையை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்ற போது 2 பேரும் வழங்கியது போலி பணிநியமன ஆணை என்பது தெரியவந்தது. அதாவது 2 பேரும் பத்திர பதிவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
இந்த மனு விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோசடி செய்த 2 பேரும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஒருவரின் கையெழுத்தை போலியாக போட்டதுடன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகம் என போலியாக சீல் தயாரித்து அச்சிட்டு மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதே போல திருநெல்வேலி பத்திரப்பதிவு துணை தலைவர் அலுவலகத்தில் இருந்து பள்ளியாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒருவருக்கு பதிவு எழுத்தர் பணியிடம் வழங்குவது போல போலியாக பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். தற்போது மோசடியில் ஈடுபட்ட நபர்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகள் பெயரிலும் போலியாக பணிநியமன ஆணை தயாரித்து பலரிடம் மோசடி செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரிகளை பார்த்துவிட்டு...
மேலும் போலி பணி நியமன ஆணை தயார் செய்த நபர்கள் தங்களால் ஏமாற்றப்பட்ட நபர்களை முதலில் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அதிகாரிகளை பார்த்து விட்டு வருகிறோம் என்று கூறி அவர்களை வெளியே காத்திருக்க வைத்து விட்டு அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து வெகு நேரத்துக்கு பிறகு வெளியே வந்து பணிநியமன ஆணை கிடைத்துவிட்டதாக கூறி தாங்கள் தயாரித்து வைத்திருந்த போலி பணி நியமன ஆணையை கொடுத்து உள்ளனர். இதனால் மோசடி நபர்கள் மீது சம்பந்தபட்ட நபர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருந்துள்ளது.
இந்த நூதன மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.