முதலைக்குளம் பெயர் குழப்பத்தை நிவர்த்தி செய்ய முறையாக நடவடிக்கை - கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
முதலைக்குளம் பெயர் குழப்பத்தை நிவர்த்தி செய்ய முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முதலைக்குளம் பெயர் குழப்பத்தை நிவர்த்தி செய்ய முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முதலைக்குளம்
உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எங்கள் ஊரின் உண்மையான பெயர் முதலைக்குளம். ஆனால், எங்கள் கிராமத்தில் தற்போது கஸ்பா முதலைக்குளம் என மாற்றப்பட்ட பெயரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் மகளுக்கு முதலைக்குளம் என்றும், மகனுக்கு கஸ்பா முதலைக்குளம் என்றும் ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
எனவே அனைத்து ஆவணங்களிலும் முதலைக்குளம் என்ற பெயரை மட்டும் பயன்படுத்த நடவடிக்கை கோரி உசிலம்பட்டி தாசில்தாருக்கு மனு அளித்தோம். ஆனால் அதனை அவர் நிராகரித்து விட்டார். எனவே தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அனைத்து ஆவணங்களிலும் முதலைக்குளம் என பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கலெக்டருக்கு உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உசிலம்பட்டி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி, வருவாய் ஆவணங்கள் அனைத்திலும் முதலைக்குளம் என உள்ளது என்று தெரிவித்து அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஒரு ஊருக்கு பல பெயர் உள்ளதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.