'தமிழர்களின் பண்பாடு உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழர்களின் பண்பாடு, தொன்மையை உலகளவில் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 36-வது மாநாட்டின் நிறைவு விழா கலிபோர்னியாவில் 'தொன்மை தமிழரின் பெருமை' என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரவையின் தலைவர் பாலா சுவாமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கிங்ஸ்லி சாமுவேல், ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரிட்டோ, இணை ஒருங்கிணைப்பாளர் மலர் மகள் அகிலன், ராம்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையுடன் இணைந்து 'சாக்ரமெண்டோ' தமிழ் மன்றமும் செய்திருந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.
மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முன்னோடி இனம்
தாய்த்தமிழ்நாட்டின் மீது பற்றும், திராவிட மாடல் நல்லாட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு எனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகத் தமிழ்ச் சங்கமமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது. இது தமிழ் விழா! தமிழ் எப்போதும் வாழவே வைக்கும்! வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.
தமிழ் என்பது நமக்கு மொழியாக மட்டுமல்ல, அமுதமாக, உயிராக, நம்மை வாழ்விக்கும் மண்ணாக, இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக, போராட்டக் களத்துக்கு வாளாக இருக்கிறது. அதனால்தான் தமிழ் என்றால் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். இனமான உணர்ச்சி அடைகிறோம். மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக்கொள்வதில் முன்னோடி இனம் நாம்தான்.
தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர்வைத்துக்கொண்டவர்கள் 18 வயதுக்குமேல், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கணக்கிட்டு சொல்லி இருக்கிறார். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும். மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாக கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.
திராவிட சின்னம்
இந்திய துணை கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செயல்பட்டு வருகிறோம். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களான கொந்தகை, அகரம், மணலூர், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் விரிவான ஆய்வுகள் நடந்து வருகிறது.
சிந்துவெளியில் 'காளைகள்'தான் இருந்தன. இது திராவிட சின்னம். சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது.
இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும். இந்தியாவிலேயே அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித்தான். தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
தமிழ்நாட்டுக்கு அழைப்பு
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை உலக தமிழர்களும், பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில் 'கீழடி அருங்காட்சியகம்' தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து, நெல்லையில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காண்பதற்கு நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று இருகரம் கூப்பி அழைக்கிறேன்.
பார் முழுதும் சென்று கொடி நாட்டிய தமிழினத்தின் வேர் அறிய வாரீர்! சீர்மிகு தமிழ்நாட்டின் சிறப்பறிய வாரீர்! சாதி, மதப்பாகுபாடு பாரோம்! அமிழ் தமிழுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஓரினம் என்ற உயரிய பண்பாட்டைக் கொண்டு வாழ்வோம்! யாதும் ஊரே யாவரும் கேளிர்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
இவ்வாறு அவர் பேசினார்.