வாடிக்கையாளருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
சேவை குறைபாடு: வாடிக்கையாளருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் தனியார் கார் நிறுவனத்துக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு
கடலூர்
கடலூர் நீதிபதிகள் குடியிருப்புசாலையை சேர்ந்தவர் அய்யாதுரை கிருஷ்ணன். இவர் சென்னையில் உள்ள தனியார் கார் டீலரிடம் கடந்த 2019-ம் ஆண்டு கார் வாங்கினார். 7 மாதங்களுக்கு பிறகு, அய்யாதுரை கிருஷ்ணன் ஓட்டிச்செல்லும் போது, திடீரென என்ஜின் பழுதாகி கார் நடுரோட்டில் நின்று விட்டது. இதையடுத்து அவர் காரை சரி செய்வதற்காக சென்னையில் உள்ள அந்த நிறுவனத்திற்கு கொண்டு சென்றார். பழுது நீக்கிய பிறகும், பல முறை இதேபோல் என்ஜின் பழுதாகி கார் ரோட்டில் நின்றது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் இது பற்றி கடலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று அவர்கள் தீர்ப்பு கூறினர். இதில் தனியார் கார் டீலர் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்பது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனம் பாதிக்கப்பட்ட அய்யாதுரை கிருஷ்ணனுக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பழுதடைந்த என்ஜினை மாற்றி அமைத்து, 2 மாதங்களுக்குள் இலவசமாக முழு சேவையுடன் கூடிய புதிய என்ஜினை வழங்க வேண்டும் என்றும் டீலருக்கு உத்தரவிட்டனர்.