தடுப்பணை மதகுகளை சீரமைக்க வேண்டும்


தடுப்பணை மதகுகளை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 May 2022 4:53 PM GMT (Updated: 25 May 2022 5:01 PM GMT)

தடுப்பணை மதகுகளை சீரமைக்க வேண்டும்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

ஒரத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள தடுப்பணை மதகுகளை சீரமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை விடுத்தார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார்.

வேளாண் துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்ட ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு;-

மதகுகளை சீரமைக்க வேண்டும்

காளிமுத்து: ஒரத்தூர், பாப்பாகோவில், ஏறுஞ்சாலை, செட்டிசேரி, கருவேலங்கடை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இரு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களில் தடுப்பணை மதகுகள் இடிந்து மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இந்த பகுதிக்கு வரும் போது தடுப்பணை மதகுகள் மேலும் பாதிப்படையும். இதனால் தண்ணீரை சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே ஒரத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள தடுப்பணை மதகுகளை சீரமைக்க வேண்டும்.

பிரகாஷ்: உளுந்து, பயறுக்கு நிவாரணம் வாங்கி தந்தால் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெறும். கடந்த 3 மாதங்களாக நாகையில் வழிபறி, திருட்டு ஆகியவை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும்.

தீர்வு காண வேண்டும்

ராமதாஸ்: ஓடம்போக்கி ஆற்றில் 20 கி.மீட்டர் தூரத்துக்கு பாலம் வேலைகள் நடைபெறுகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் சீராக செல்ல தடை ஏற்படும். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

அமீர்: திட்டச்சேரி பகுதியில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து ஏராளமான கால்நடைகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. இதனால் இந்த பகுதியில் நெல் விளைவிக்கவே அச்சமாக உள்ளது. இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண வேண்டும்.

உழவு மானியம் ரூ.600

பாபுஜி: குறுவைக்கு தேவையான விதை நெல்களை போதுமான அளவில் கையிருப்பு வைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.600 வழங்கப்பட்டது. இதை தற்போதும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன்: கீழ்வேளூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் வழங்குவது போல விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வயல்வெளிகளில் மின்கம்பங்கள் சாதாரண முறையில் அமைப்பதால் அறுவடை நேரத்தில் வயலுக்குள் சாய்ந்து விடும் நிலை ஏற்படும். எனவே மின்கம்பங்களை கான்கிரீட் பயன்படுத்தி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story