சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
செம்பனார்கோவில் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார்-மயிலாடுதுறை சாலையில் செம்பனார்கோவில் அருகே புஞ்சை கிராமம் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால் மதகு பழுதடைந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடந்து சென்று வந்தனர். மேலும் புதிய பாலம் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட்ட இடத்தில் சாலை அமைக்கப்படாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் நெடுஞ்சாலை துறை மூலம் புஞ்சை கிராமத்தில் பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த இடத்தில் சாலை அமைக்கப்படவில்லை, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது வேதனை அளிக்கிறது. எனவே இந்த பகுதியில் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினர்.