பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
x

அய்யன்கொல்லி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

அய்யன்கொல்லி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குளம்போல் மாறியது

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே நெல்லிமேடு, பரிவாரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆதிவாசி மக்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நெல்லிமேடு, பரிவாரம் பகுதிகளுக்கு செல்லும் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் சாலை மீண்டும் பழைய நிலைக்கு மாறியது. பல இடங்களில் குழிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால், சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அவசர தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து சென்று வர சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நிற்கும் சம்பவம் நடந்து வந்தன.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அய்யன்கொல்லியில் இருந்து மாங்கோடு செல்லும் சாலையில் பழைய சாவடி பகுதியில் இருந்து நெல்லிமேடு, பரிவாரம் பகுதிகளுக்கு சாலை செல்கிறது. கடந்த பல மாதங்களுக்கு சாலை பழுதடைந்ததால், தண்ணீர் தேங்குவது வாடிக்கையானது. இதனால் சாலை மேலும் மோசமடைந்தது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story