பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
குன்னூர்
குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட கோடேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு பிரதான சாலையில் இருந்து ஒத்தையடி பாதை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் குன்னூர்-மஞ்சூர் பிரதான சாலையில் இருந்து பொதுமக்கள் இணைந்து சாலை அமைத்து பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். இந்த சாலை சீரமைக்கப்பட்டு இருந்தாலும், தற்போது பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்கக்கோரி அதிகரட்டி பேரூராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலர் மனோகரன், பேருராட்சி தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே சாலையை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக சாலையில் பல இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு பணி கிடப்பில் போடப்பட்டது. தோண்டிய இடத்தில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.