சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய வழித்தடம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தை அடுத்த, வடகட்டளை மாரியம்மன் கோவிலில் இருந்து, கீழபனங்காட்டாங்குடி செல்லும் மண்சாலை இருந்தது. இந்த மண்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது. அதனால், இந்த சாலையில் லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
மேலும், இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இதனால் வடபாதிமங்கலம், பழையனூர், ஓகைப்பேரையூர், வடகட்டளைகோம்பூர், வேளுக்குடி, கூத்தாநல்லூர், கீழபனங்காட்டாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி-கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆற்றின்கரையில் சரிந்து விழுந்தது
இந்த சாலை வெள்ளையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளதால், ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த சாலையில் கானூர் என்ற இடத்தில் உள்ள சாலை சேதமடைந்து ஆற்றின் கரையோரத்தில் சரிந்து விழுந்தது. இதனால்,அந்த இடத்தில் சாலையில் பெரியபள்ளம் ஏற்பட்டது.
இதனால், வாகனங்கள் சென்றுவர முடியாதநிலை உள்ளது.அதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சரிந்து பள்ளம் ஏற்பட்ட இடத்தில் கற்களைக்கொட்டி சீரமைப்பு செய்தனர்.
சீரமைக்க கோரிக்கை
ஆனால், கற்கள் கொட்டிய இடத்தில் தற்போது சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் அந்த சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் இந்த சாலையில் சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த அந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாிகள் சீரமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.