பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
சேரம்பாடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர்
சேரம்பாடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.1-ல் தேயிலை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு சேரங்கோடு பஜாரில் இருந்து சேரம்பாடி பழைய தேயிலை தொழிற்சாலை வழியாக சாலை செல்கிறது. இந்த வழியாக தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், அவசர தேவைகளுக்கும் சென்று வருகின்றனர்.
இதற்கிடையே அந்த சாலை அமைத்து பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. மேலும் வாகனங்களில் செல்லும் போது, திடீரென பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் அவதி
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சேரம்பாடி பகுதியில் உள்ள டேன்டீ ரேஞ்ச் எண்.1 பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சை தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் மூலம் தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அவ்வாறு வாகனங்கள் செல்லும் போது, மோசமான சாலையால் பழுதடைந்து நின்று விடுகின்றன.
அந்த சமயத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் சிக்கி கொள்ளும் நிலை காணப்படுகிறது. மேலும் தோட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து செல்லும் போது, காட்ட யானைகள் துரத்தில் அச்சத்தில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். குண்டும், குழியுமான சாலையால் அவசர தேவைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக ஆஸ்பத்திரிக்கு செல்லவும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல வாகனங்கள் முன்வருவது இல்லை. இதனால் நாங்கள் கடும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.