பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Jun 2023 8:45 PM GMT (Updated: 20 Jun 2023 8:45 PM GMT)

எருமாடு அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

எருமாடு அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே முயல்மூலா ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு எருமாட்டில் இருந்து பள்ளி சந்திப்பு வழியாக அய்யன்கொல்லி செல்லும் சாலையில் மாதமங்களத்தில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். ஆதிவாசி மக்கள் அவசர தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் உடல் நலக்குறைவாக நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது, ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு எருமாடு பஜாருக்கு வந்து செல்ல வேண்டும்.

இதற்கிடையே சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் முயல்மூலா கிராமத்திற்கு வருவது இல்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நோயாளிகள், கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

மேலும் எருமாடு பஜாரில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தலைச்சுமையாக கிராமத்திற்கு கொண்டு வருகின்றனர். ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமலும், தரைத்தளம் அமைக்கப்படாமலும் உள்ளது.

இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு வரும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். மேலும் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றவும், புதிய தொகுப்பு வீடுகள் விரைவில் கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் நேற்று எருமாடு பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கேசவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிப்பா, பாஸ்கரன் மற்றும் ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டனர்.


Next Story