போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே தொடங்கிய தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் தொடங்கியது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம் மடம் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ் சைவ மரபிற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை ஆற்றிவருகிறது. தற்போதைய குருமணிகளான தருமபுரம் ஆதீன திருமடத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் புனருத்ரனம் செய்யப்பட்டு குடமுழுக்கு வைபங்கள் நடைபெற்று வருகின்றன.
தருமை ஆதீன குருமுதல்வர் குருஞான சம்பந்தரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பத்து நாள் நடைபெறும் உற்சவத்தின் இறுதி நாள் இரவு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். பல்லக்கில் ஆதீனகர்த்தா சொக்கலிங்க பூஜை செய்து கொலுவீற்றிருக்க, பக்தர்கள் பல்லக்கை சுமந்த நான்கு வீதிகளிலும் உலா வருவார்கள்.
இந்நிலையில் மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் தொடங்கியது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் பூட்டி, ஆதீன தம்பிரான்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். இந்த நிகழ்வில் சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.