ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நாளையுடன் நிறைவு


ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நாளையுடன் நிறைவு
x

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது..

சென்னை,

நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதற்கான வங்கிகள் சிறப்பு கவுண்ட்டர்களையும் திறந்திருந்தன.

நாளையுடன் நிறைவு

இதற்கிடையே ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவ்வாறு மீறி வாங்கினால் அதற்கு கண்டக்டர்களே முழு பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

அதேபோல், சினிமா தியேட்டர்கள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. நாளையுடன் காலக்கெடு முடிவடைவதால், இன்னும் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

உண்டியல்களில் ரூ.2 ஆயிரம்

கோவில் உண்டியல்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் அனைத்து கோவில்களிலும் முன்கூட்டியே உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் ரூ.2 ஆயிரம் கிடந்தால் அவற்றை உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளனர்.

அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் பணம் எண்ணியதில் ரூ.5 கோடி இருந்துள்ளது. அதில் ரூ.2ஆயிரம் நோட்டுகளும் இருந்துள்ளது. இவற்றையும் மாற்றும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

பெட்ரோல் பங்குகளில் நிறுத்தம்

இதற்கிடையே தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறும் போது, 'மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ள போதுமான காலஅவகாசம் வழங்கி இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் இருந்த நோட்டுகளை வங்கிகளில் படிப்படியாக கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டு வருவது முற்றிலும் நின்று போனது. சிலர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கி கார், வேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி சென்றுள்ளனர். தற்போது அதுவும் நின்றுவிட்டது.

நாளையுடன் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் நீக்கப்படுவதால் இன்று (நேற்று) முதல் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ரூ.2 ஆயிரம் வாங்குவதை நிறுத்தி உள்ளோம். இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களும் இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தருவதை தவிர்க்கலாம்' என்றார்.

டாஸ்மாக்கில் வாங்குவதில்லை

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'போதிய அவகாசத்தை மத்திய அரசு வழங்கியதால் பொதுமக்கள் கைகளில் இருந்த ஒரு சில ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இதனால் எங்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் முற்றிலுமாக வருவது நின்றுவிட்டது. தற்போது நாங்களும் வாங்குவதை நிறுத்தி கொண்டோம். காரணம் இனி வங்கிகளிலும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது' என்றனர்.

வங்கி அதிகாரிகள் கூறும் போது, 'நாளை வரை பணத்தை வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். மத்திய அரசு கூறியப்படி இந்தப்பணியை சிறப்பாக செய்து முடிப்போம்' என்றனர்.


Next Story