கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்துக்கு நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானம் ரத்து
கடையநல்லூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் எனது தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில், நகராட்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு, தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பண்பொழி சாலை அருகில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.84 ஏக்கர் பரப்பளவில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தை பொது நோக்கத்திற்காக கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். ஆனால் தற்போது நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோள்படி, பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவசாய பயன்பாடு உள்ள நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்ற தீர்மானம் கைவிடப்பட்டது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.