அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும்
அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1-2-2023 மற்றும் 2-2-2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த தொழில் துறை மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
பின்னர், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கூட்டம்
அதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல்வரின் முகவரி
மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை, அரசு தீர்த்திடும் என்ற நம்பிக்கையில் அவற்றையெல்லாம் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள். அவற்றை, நாம் வெறும் காகிதங்களாக பார்க்காமல் ஒருவரின் வாழ்வாக, எதிர்காலமாக கருதி பார்க்கவேண்டும். எனவே தான் இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி ''முதல்வரின் முகவரி'' என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்த அரசு, அவர்களின் குறைகளைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பட்டா மாறுதல் தாமதமின்றி, எவ்வித அலைக்கழிப்பும் இன்றி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் உறுதிசெய்ய வேண்டும். பெரிய திட்டங்களை மக்களுக்காக அரசு நிறைவேற்றி வரும் வேளையில், மக்களுக்கு தேவையான இதுபோன்ற அடிப்படையான அரசு சேவைகள் வழங்கப்படுவதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தராது. ஆகவே, அதிலே கவனமாகப் பணியாற்றுங்கள். சார்நிலை அலுவலர்களை ஆய்வு செய்யுங்கள். தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். குறிப்பாக கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித் தாருங்கள்.
முன்னேற்றம் காணுங்கள்
இருக்க வீடு; நடக்க சாலை; குடிக்க தண்ணீர்; இரவில் தெருவிளக்கு; படிக்கப் பள்ளி; கிராம சுகாதாரம் - இதைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் இருந்தாலும் அவற்றை தீர்த்து முன்னேற்றம் காணுங்கள்.
விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவ்வரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வு வளமானால்தான், மாநிலம் வளரும், அது வளம் பெற்றதாக கருதப்படும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள்.
கண்காணிக்க வேண்டும்
அடுத்தபடியாக ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள். என்னை பொறுத்தவரை உங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிகள் பட்டியலில் இவை முதலிடம் பெறவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கான வீட்டுவசதி, தொழில் முனைவோர் திட்டங்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல், பள்ளி கல்லூரி விடுதிகள் ஆகிய பலவற்றிலும் சார்நிலை பணியினை கண்காணிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்தபடியாக, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திடவேண்டும். அதோடு நில்லாமல், குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதே ஊடகத்திற்கு நீங்கள் அளிக்கவேண்டும். இது மிக மிக முக்கியமாக நீங்கள் உங்கள் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பாக பதில் அளியுங்கள்
இறுதியாக ஒன்றை உங்கள் அனைவரிடமும் குறிப்பாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலன் கருதியே அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொண்டுசேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை காலத்தே செய்யுங்கள். செய்தும் வருகிறீர்கள். இன்னும் சிறப்பாக பணியாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் குமார் ஜயந்த், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், அரசுத்துறைச் செயலாளர்கள், சேலம் மாவட்ட கலெக்டர் எஸ்.கார்மேகம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தர்மபுரி மாவட்ட கலெக்டர் கே.சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.