சுங்க கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை; 49 பேர் கைது
சுங்க கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுங்கவரி கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார்.மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் பழனி, வினோத்குமார், பிரகாஷ், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், சிவக்குமார், சின்னத்தம்பி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சுங்கவரி கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முற்றுகை-மறியல்
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வாகனங்கள் செல்லும் பாதைகளில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமுருகன், ஆனந்த், சப் -இன்ஸ்பெக்டர்கள் காத்த முத்து, சரவணன் உள்ளிட்ட விக்கிரவாண்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
49 பேர் கைது
இருப்பினும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.