ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அ லுவலகம் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களுக்கு, அரசால் வழங்கப்பட்ட இடத்தினை 100 ஆண்டுகளுக்கு மேல் வரி செலுத்தி சிலர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தினை தனிநபருக்கு கொடுப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செயல்படுவதாக கூறி, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கூடினர். இதில், மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு அம்பிகா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தொடர்ந்து ஆண்டிமடம் பஸ் நிலையத்திலிருந்து கடைவீதியில் கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்த அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டு சுமுகமான தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டம் என எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் காரணமாக ஆண்டிமடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.