கோவையில் திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்


கோவையில் திட்டமிட்டபடி இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெறும்
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் அனுமதி கொடுக்காவிட்டாலும் கோவையில் இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

போலீசார் அனுமதி கொடுக்காவிட்டாலும் கோவையில் இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் பா.ஜனதா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஜி.பி. அறிவித்து உள்ளார். அதை நான் வரவேற்கிறேன். அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் கடந்த 15 மாதங்களாக மாறிவிட்டது. பி.எப்.ஐ. அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு பின்னர் அது உச்சத்தை எட்டி உள்ளது.

நஷ்டஈடு

காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தமிழகத்தில் தற்போது நடந்து உள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

பா.ஜனதா தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். நாம் கொடுக்கும் நிர்பந்தத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு வாங்கிக்கொடுக்க முயற்சி எடுப்போம். இதற்காக 4 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை எடுப்போம்

தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சியை யாராலும் சீர்குலைக்க முடியாது. எங்கள் பேச்சும், அமைதியும் ஒரு எல்லை வரைதான். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும். ஒரு இயக்கம், பயங்கர வாத கொள்கை மூலம்தான் வளர முடியும் என்று நினைத்தால் அதற்கு தமிழக மண்ணில் இடம் இல்லை. யாரெல்லாம் தவறு செய்வார்கள் என்று போலீசாருக்கு நன்றாக தெரியும். அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.

கோவையில் நாளை (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு போலீசார் அனுமதி கொடுக்காவிட்டாலும் திட்டமிட்டபடி நடத்தப்படும். இந்துக்களை தவறாக பேசிய ஆ.ராசா மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதை எதிர்த்து பேசிய பா.ஜனதா கோவை மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏராளமான தொண்டர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். பெண்களை கைது செய்து உள்ளனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து போலீஸ் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.


Next Story