துடைப்பத்தால் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


துடைப்பத்தால் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

மணப்பாறை அருகே துடைப்பம், பாயால் ஒருவரை ஒருவர் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் உயிரோடு இருப்பவரை பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோதமும் நடந்தது

திருச்சி

மணப்பாறை அருகே துடைப்பம், பாயால் ஒருவரை ஒருவர் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் உயிரோடு இருப்பவரை பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோதமும் நடந்தது.

கோட்டை மாரியம்மன் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூரில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். ஆனால் சமீபத்தில் கொரோனா பெருந்தொற்று, அதன்பின் கோவில் புனரமைப்பு பணி நடைபெற்றதால் கடந்த 6 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் இவ்வாண்டு திருவிழா நடத்திட அணியாப்பூர், வெள்ளாளபட்டி, தவளவீரன்பட்டி ஆகிய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி சகுணம் கேட்கப்பட்டு முறைப்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்றது.

துடைப்பத்தால் அடித்துக்கொண்டனர்

பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து கோட்டை மாரியம்மன் கோவிலில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் மாலையில் பாடை வேஷம், படுகளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் வினோத நிகழ்ச்சியாக பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவினர். இதுஒருபுறம் இருக்க தலையில் முட்டையை அடிப்பது, ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்வது, வீட்டில் உள்ள கிழிந்த பாயை எடுத்து வந்து அடிப்பது உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இறந்தவர் போல்...

தனது மகனுக்கு குழந்தை வரம் நிறைவேறியதால் அணியாப்பூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 78) என்பவர் நேர்த்திக்கடனாக இறந்தவர் போல் பாடையில் படுத்து கிடந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் இறுதி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது, சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் வந்து விபூதி போட்டதும் இறந்தவர் உயிருடன் வந்தார். பின்னர் அவர் அம்மனை வழிபட்டு சென்றார். இவ்வாறு வினோதமாக நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில் திருவிழாவில் வித்தியாசமான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

----

1 More update

Next Story