வைர கற்கள் திருடியவர் சிக்கினார்
கோவையில் வைர கற்கள் திருடியவர் சிக்கினார்.
கோவை
கோவை காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் அன்வருல்லா. இவரு டைய மனைவி ஜாஹித் (வயது57). வைர கற்கள் வியாபாரி. இவருக்கு, கேரள மாநிலம் திருச்சூர் பெருமங்கலத்தை சேர்ந்த டிரைவர் ஹசன் (39) என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது. வைர கற்கள் வியாபாரத்தில் ஹசன் புரோக்க ராக செயல்பட்டார். ஜாஹித், கடந்த பிப்ரவரி மாதம் 6.5 கேரட் வைர கற்களை துபாயில் இருந்து ஒருவரிடம் வாங்கினார். அதை விற்க ஹசனின் உதவியை நாடினார்.
இதனால் ஹசன். திருச்சூரில் இருந்து கோவை வந்து ஜாஹித்தை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஜாஹித் காண்பித்த வைரக்கல்லை புகைப்படம் எடுத்தார். அவர் வீட்டில் இருந்து சென்ற சிறிது நேரம் கழித்து ஜாஹித் தேடிய போது வைர கற்களை காண வில்லை. அதை ஹசன் திருடிசென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த வைர கல்லை மீட்டனர்.